கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதற்காகவும் மேலும் குண்டாஸ் வழக்குபதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருப்பதற்காகவும் ரூ.10000 லஞ்சமாக விபச்சார தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரெமா கேட்டுள்ளார்.

ஆனால் தன்னிடம் அவ்வளவு தொகை தற்போது இல்லை எனக் கூறியுள்ளார். இருந்தபோதிலும் ரூ. 3000 கொடுத்தால் மட்டுமே உனது வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியுள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார் பின்னர்டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார் அஜிதாவிடம் இருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இடம் ரூபாய் மூன்றாயிரம் லஞ்சப் பணத்தை பெற்ற போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான ரெமா விபச்சார தடுப்பு பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

திருச்சி மாநகரத்தை பொருத்த வரையில் 60 ஸ்பா சென்டர்கள் இயங்கி வருகிறது. ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ரெமா தனது வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் மாதா மாதம் லஞ்சமாகப் பெற்று தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் எஸ்.ஐ. ரெமா உயர் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு தொகை லஞ்சம் கொடுத்தார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் அவரது இரு சக்கர வாகனத்தில் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *