தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 12 – நாளாக தலையில் முக்காடு போட்டு நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.
மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. தொடர்ந்து 12- வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விவசாயிகளின் நலன்கள் எப்படி அதிகாரிகள் அலட்சிய போக்கில் இருக்கிறார்களோ, அதே போன்று தான் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில் அலட்சியப் போக்கில் செயல்படுகிறார்கள். உடனடியாக அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை குறித்து அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் தீவிரமடையும் என்றார்.