தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில், நீர்வளத் துறையின் சார்பில் அரியாறு மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள் வடிகால்கள் வாய்க்கால் தூர்வாரும் பணி ரூபாய் 18.75 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று காலை மணிகண்டம் ஒன்றியம் , புங்கனூரில் அரியாறு, கருமண்டபம் பகுதியில் கோரையாறு, வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் பாலம் மற்றும் பாத்திமா நகர் பகுதியில் குடமுருட்டி, ஆறு, கம்பரசம்பேட்டை பகுதியில் கொடிங்கால் வடிகால் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி,உரிய அளவீடுகளின்படி தூர்வாரும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும், வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அமைச்சர் கே.என் நேரு உத்தரவிட்டார். இந்நிகழ்வுகளில், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி ஆணையர், கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.