பொதுமக்களின் எதிர்ப்பைமீறி கோவில், மருத்துவமனை, குடியிருப்புகள் அதிகம் நிறைந்த திருச்சி வயலூர்சாலை மற்றும் உறையூர் லிங்கநகர் பகுதியில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிதாக டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர திமுக அரசு, காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும்நிலையில் இன்றைய தினம் உயர்நீதிமன்ற அனுமதி பெற்று திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
மாநகர் மாவட்டசெயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக ஆட்சியில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகிலும் 24 மணி நேரமும் வெட்ட. வெளிச்சமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும்,
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் பொதுமக்கள் குடிக்காமல் இருக்கக்கூடாது என்ற நோக்கில் சாராயமாடல் என்ற பெயரில் இந்த அரசு செயல்படுவதாகவும், இதனை தட்டி கேட்க ஆள் இல்லாத காரணத்தினால் இது எல்லை மீறி தற்போது மனமகிழ்மன்றம் என்ற பெயரில் 24 மணிநேரமும் மதுபானகடைகள் இயங்கிவருவதாகவும் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் குற்றம்சாட்டினார்.