திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட, அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இதன்படி, கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின், கிளை பங்குகளான ஆலம்பட்டி புதூர், பாரப்பட்டி உள்ளிட்ட ஏழு கிளை பங்குகளின் திரு குடும்பத்தினர் கலந்து கொண்ட, திருக்குடும்ப திருவிழா ஆலயத்தில் நடைபெற்றது.

அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலய பங்குத்தந்தை ஜோ.ஜோ லாரன்ஸ் தலைமையில், அருட்தந்தையர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். இதில் பங்கு மக்கள் தங்கள் திருமண நாளில் ஏறெடுத்த வாக்குறுதிகளை நினைவு கூறும் வகையில் வார்த்தை பாடு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயேசுவினுடைய திரு உடலையும், திரு ரத்தத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த திரு குடும்பத் திருவிழாவானது, இயேசு பாலகனை பெற்றெடுத்த அன்னை மரியாள், சூசையப்பர் ஆகியோரை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்பட்டது. அம்மாபேட்டை சுற்றியுள்ள பல்வேறு பங்குகளில் இருந்தும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் உற்றார் உறவினர்களோடு, குடும்பங்களாக இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவில், சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகளும், பங்கு பேரவையினர், பல்வேறு சபையினர், அன்பியங்கள், கலந்து கொண்ட பாடல் நிகழ்ச்சிகளும், கணவன் மனைவியர் கலந்து கொண்ட சிறப்பு போட்டிகள் நடைபெற்றது.

இந்த விழா குறித்து, பங்கு தந்தை ஜோ.ஜோ லாரன்ஸ் கூறும்போது… ஒவ்வொரு குடும்பமும் ஒரு குட்டி திருச்சபை என்பதை நினைவு கூறும் வகையிலும், இந்த குடும்பங்களில் அன்பு, சமாதானம் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த விழா கொண்டாடப்பட்டது. இவர்கள் உலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தை உணர்த்துவதற்காகவும் இந்த விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் சேசு சத்தியநாதன், அந்தோணி, அருட் சகோதரிகள், பங்கு மக்கள், பங்குப்பேரவை மற்றும் ஊர் மணியக்காரர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்