உலக காது கேட்கும் நாள் மார்ச் 3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது, இதனையொட்டி தேசிய காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி காது மூக்கு தொண்டை பிரிவு இணைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வாழ்நாள் முழுவதும் கேட்கும் திறன் பெற காதுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு காது மூக்கு தொண்டை பிரிவு துறைத்தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டீன் வனிதா..
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 8.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை திருச்சி அரசு மருத்துவமனையில் 73 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் கிடைத்துள்ளது. மேலும் இதுவரையிலும் 3000 காதுகேட்கும் மெஷின்கள் இளைஞர்கள் மற்றும் வயதானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருச்சியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது, 600 பாதிப்பு எண்ணிக்கை என்ற நிலை மாறி தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் தற்போது மீண்டும் பழைய வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது, அதேநேரம் கொரோனா நடவடிக்கைகளை குறைக்கவில்லை, பரிசோதனையையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மறுபடியும் தயார் நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பலருக்கும் காது கேளாமை மற்றும் காது பாதுகாப்பு குறித்தும், காது கேளாமையை போக்க சிகிச்சைகள் மற்றும் குழந்தைகளுக்கான காக்ளியர் சிகிச்சை குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் காக்ளியர் சிகிச்சை பெற்ற குழந்தைகள் இருவருக்கு பாதுகாப்பு கையேடு அடங்கிய பரிசினை மருத்துவமனை முதல்வர் வனிதா வணங்கினார்.