வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அரியாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரியாற்றில் இருகரையை தொட்டு தண்ணீர் வந்தது.
இந்நிலையில் மணப்பாறையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை அதிக கன மழைபெய்தது, அதாவது 27.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் புங்கனூர்-தீரன்நகர் இடையே அரியாற்று நீர் கரைகளை கடந்து தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இதனால் இனியானூர் கிராமத்தில் அரியாற்று கரையோர பகுதியில் சுற்றியுள்ள குடியுருப்புகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்தது.
வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை பத்திரமாக மீட்டு கொண்டு வரும் தீயணைப்பு படை வீரர்கள்.
திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் திருச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தண்ணீரில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர்.