திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்திரா காந்தி மகளீர் கல்லூரியில் சனிக்கிழமை இரவில் இருந்து சுமார் 50 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், செல்வராஜ், வசந்தன், பொன்ராஜ் மற்றும் பாண்டி ஆகியோர் அடங்கிய குழு நேற்றிலிருந்து அந்த கல்லூரியின் உணவகத்தை ஆய்வு செய்து வந்தது.

இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் இருந்ததால் அந்த உணவு உற்பத்தி கூடத்தை தற்காலிகமாக மூடினர். மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையில் இருந்து அங்கு சமைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றிலிருந்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட காரணம் என்பதை அறிய உணவு பாதுகாப்பு துறையின் கீழ் இரண்டு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பகுப்பாய்வு அறிக்கை வரப்பெற்றதை அடுத்து இங்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்