திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 வைண ஸ்தலங்களில் ஒன்றானதும், திருக்கரம்பனூர், ஆதிமாபுரம், பிச்சாண்டார் கோவில் என பிரசித்திபெற்றதும், இந்தியாவிலேயே மும்மூர்த்திகள் முப்பெருந் தேவியர்களுடன் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளது. திருத்தலமான அருள்மிகு உத்தமர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் பிச்சாண்டார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள இக்கோவில் பிச்சாடன மூர்த்தி அவதாரத் திருத்தலமாக உள்ளதுடன், இங்கு வைகாசி விசாசத்திருவிழா சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.
இவ்வாலயத்தில் இன்று பிச்சாண்டேஸ்வரர் திருவீதிஉலா வைபவம் நடைபெற்றது. வெள்ளிக்கவசம் அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் பிச்சாண்டேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்க திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, மேளதாளத்துடன் சிவனடியார்கள், அடியார்கள் மற்றும் பக்தர்கள் என பெருந்திரளானோர் கலந்துக்கொண்டனர்.
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் பிச்சாண்டேஸ்வரர் திருவீதிஉலாவில் பங்கேற்று வழிபட்டனர். வீதிகள்தோறும் செல்லும் பிச்சாண்டேஸ்வரருக்கு மக்கள் பூ, பழங்கள், பச்சரிசி, வெல்லம், பசுநெய், பணம் உள்ளிட்டவைகளை வழங்கி பிச்சாண்டேஸ்வரர் அருளைப் பெற்றனர்.