திருச்சி விமான நிலையத்தில் முதல் அட்வைஸரி கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், விமான நிலைய இயக்குனர் வேணுகோபால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசுகையில்:- திருச்சி விமான நிலையத்தில் அட்வைஸரி கமிட்டி முதல் கூட்டம் ஓடுதள விரிவாக்கம் மற்றும் பயணிகளின் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெரிய விமான நிலையம் கிடைத்தாலும் பெரிய விமானங்கள் செயல்பாட்டுக்கான வசதிகள் இல்லை. ஓடுதள விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இதுவரை முடியவில்லை. 97விழுக்காடு பணிகள் இதுவரை முடிந்துள்ளது. 3ஹெக்டர் நிலம் கையகப்படுத்த வேண்டியது உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
அமீரக நாடுகளுக்கு விமான சேவை இருந்தாலும் கட்டணம் அதிகமாக உள்ளது. வெளிநாடுகளுக்கான விமானத்தை இங்கு இயக்குவதற்கான அனுமதி கிடையாது. இந்திய விமான நிறுவனங்கள் சேவையும் கூடுதலாக செய்வதில்லை. எனவே கட்டணம் கூடுதலாக உள்ளதால் பயணிகள் பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அமீரக விமானங்களுக்கான அனுமதி வழங்க வேண்டும் அல்லது கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய விமானத்தில் அமைச்சருடன் இதுகுறித்து பேசி உள்ளேன். ஆட்டோ ஓட்டுனரின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு குறிப்பிட்ட பகுதி வரை ஆட்டோ வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அமீரக நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களிடம் அத்துமீறல் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதிகமாக பயணம் செய்பவர்களை தனியாக எடுத்தும் அத்துமீறல் செய்வது மனக்கசப்பை ஏற்படுத்தும். குற்றவாளி இல்லாத நபரை குற்றவாளி கூண்டுக்குள் வைத்து அசிங்கப்படுத்தும் போது சங்கடத்தை உருவாக்குகிறது.
இது திருச்சி விமான நிலையத்தில் பெரிய பிரச்சினையாக, பேசும் பொருளாக உள்ளது. இது அவப்பெயரை உருவாக்கும், எனக்கும் கெட்ட பெயரை உருவாக்கும் இது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளேன். நிலம் கையகப்படுத்தி பணிகள் அனைத்தும் 6மாதத்திற்குள் முடிவடையும் என நம்பிக்கை இருக்கிறது. நிலம் கையகப் படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது. திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஓடுதளம் வருவதால் சாலை மூடப்படும் என்ற செய்தி அது வெறும் வதந்தி தான் அப்படி ஓடுதளம் வந்தால் கீழே செல்லும் விதமாக சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.