தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு பலருக்கு நியாபகம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக திருச்சி மாவட்ட மக்கள் அதை மறந்திருக்க வாய்ப்பில்லை.கடந்த 2005 ஆண்டு திருச்சி புனித வளனார் கல்லூரியின் முதல்வராக பாதிரியார் ராஜரெத்தினம் பொறுப்பேற்கிறார். கடந்த 2004ஆம் ஆண்டிலேயே கிளினஸ் ப்ளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரி ராஜரத்தினத்திற்கு அறிமுகமாகிறார்.அதன்பின் பாதிரியார் ராஜரெத்தினம் 2006 ஆம் ஆண்டு புனித வளனார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி கொண்டிருந்த போது, திருச்சிக்கு இசை ஆசிரியையாக பணியிடமாறுதல் செய்யப்பட்டு பிலாரன்ஸ் மேரி வருகிறார்.ஜனவரி 26ஆம் தேதி 2006ல் ராஜரெத்தினம் தன்னுடைய குருமார்கள் தங்கும் விடுதியிலேயே அவரை பாலியல் வன்கொடுமை செய்கிறார். இறுதியாக பலமுறை அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, 2008ல் பிலாரன்ஸ் மேரி கர்ப்பம் அடைகிறார். அதன்பின் கே.எம்.சி மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள்.அதன்பிறகு 2009ஆம் ஆண்டு மீண்டும் ராஜரெத்தினம் பிலாரன்ஸ் மேரியை அழைக்க அப்போது தான் பிரச்சனை வெடிக்கிறது. இவருடைய செயல்பாடுகள் குறித்து அதுவரை வாய்திறக்காத பிலாரன்ஸ் மேரி 2010ல் தன்னுடைய சபைக்கு கடிதம் ஒன்றை எழுதி, அவருடைய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சபையானது ராஜரெத்தினத்தை வேலை நீக்கம் செய்கிறார்கள்.2011ல் பிலாரன்ஸ் மேரி சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பலகட்ட விசாரணைகள் நடைபெற்றது. அதன்பின் அவர்மீது சுமத்தபட்ட குற்றம் குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அதில் குற்றவாளிகளாக மொத்தம் 5 பேர் சேர்க்கப்படுகிறார்கள். அதில் முதல் குற்றவாளியாக ராஜரெத்தினம் சோ்க்கப்படுகிறார். இன்றுவரை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிரியார் ராஜரெத்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை சபையாரிடம் ஒப்படைக்காமல் ஓயாமாரி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டு, அதன் சாம்பல் மட்டுமே சபையாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் குற்றவாளியான ராஜரத்தினம் இறந்ததை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற ஜீலை மாதத்திற்குள் மீதம் உள்ள 4 குற்றவாளிகளுக்கும் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றம் மூலம் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.