தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்ட சமுதாய கூடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற முகாமில் அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ், கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். இம்முகாமில் பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை, முட நீக்கியல், தோல் நோய், மகப்பேறு, சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், மருத்துவர்கள் பிரித்விராஜ், தினேஷ் மற்றும் கி.ஆ.பெ மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வெளியே வந்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டியிடம் 30க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர கோரி கோரிக்கை வைத்தனர். கூடிய விரைவில் இந்த பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்து சென்றார்.