திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காணக்களியநல்லூரில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் எல்லையம்மன், ரேணுகாதேவி அம்மன், ஜமதக்னி முனிவர், பாப்பாத்தி அம்மன், காலபைரவர் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்தன. சுவாமிகள் மட்டுமின்றி கோவில் சிதிலங்களும் புனரமைக்கப்பட்டு கோவில் முழுவதும் சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் செய்து கருங்கல்லால் கர்ப்ப கிரஹம், அர்த்த மண்டபம், பரிவார ஆலயங்கள், மகா மண்டபம் முதலியன புதியதாக அமைக்கப்பட்டன.அத்துடன் விமானங்கள் எழுப்பி பல்வேறு அழகிய சுதை சிற்பங்கள் வண்ணம் தீட்டி அழகு மிளிர அமைக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து இன்று (24-ந்தேதி, வெள்ளிக்கிழமை) எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதற்கான பூர்வாங்கள் பூஜைகள் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கிராம சாந்தி நடந்தது.நேற்று முன்தினம் (22-ந்தேதி, புதன்கிழமை) காலை 9 மணிக்கு காந்தி ஹோமம், திசா ஹோமம், புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல், அஷ்டாதச கிரியைகள், தசதரிசனம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், முதற்காய யாக பூஜை நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், யாக பூஜை ஜபம் ஹோமம், இரவு 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை காலம்-1 நடைபெற்றது. நேற்று (23-ந்தேதி, வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு யாக பூஜை ஜபம், திரவிய ஹோமம், காலை 11.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை காலம்-2, விமான கலசங்கள் அமைத்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல், எந்திரஸ்தாபனம் செய்தலும், மாலை 5.30 மணிக்கு யாக பூஜை ஜபம், திரவிய ஹோமமும், இரவு 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை காலம்-3 நடைபெற்றது.
இதையடுத்து இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு யாக பூஜை ஜபம், திரவிய ஹோமம், நாடி சந்தனம், ஸபர்ஸாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை காலம்-4, காலை 9 மணிக்குள் திருக்கலசங்கள் எழுந்தருளல், 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10 மணிக்கு மூலவர் எல்லையம்மன் கும்பாபிஷேகம், 10.15 மணிக்கு ஏனைய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேக பிரசாதம் வழங்குதல் மற்றுமம் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. முன்னதாக கும்பாபிஷேகத்தை அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி கோவில் தண்டபாணி சிவாச்சாரியார், பூவாளூர் ராஜா சிவாச்சாரியார், சிவகாம பாஸ்கரா பிரபு சங்கர் சிவம் ஆகியோர் ஆகம முறைப்படி நடத்தி வைத்தனர். இந்த மகா கும்பாபிஷேக விழாவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் காணக்கிளியநல்லூர் கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.