தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தி.மு.க. தொண்டரை தாக்கியது, நிலமோசடி வழக்கு உள்ளிட்ட 3- வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரம் மூன்று நாட்கள் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கடந்த திங்கள் கிழமைகளில் கையெழுத்திட்ட ஜெயக்குமார் இன்று புதன்கிழமை 5-வது நாளாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தார். அப்போது கன்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி எழுந்து நின்று இருகரம் கூப்பி நிபந்தனை ஜாமினில் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்ற விதம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சருக்கு இப்படிப்பட்ட வரவேற்பு என்றால்? மற்ற கைதிகளுக்கு இதே மரியாதை காவல்துறையினர் வழங்குவார்களா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எஸ்.ஐ கணேசமூர்த்தியிடம் இதற்கு முன்னால் இங்கிருந்த ஆய்வாளர் மாற்றப்பட்டு விட்டாரா? என கேள்வி கேட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.