திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், அத்தொகுதிக்குட்பட்ட வார்டு 15, 15ஏ, 15பி பகுதிகளிலான மகாராணி தியேட்டர், டவுன் ஸ்டேஷன் ரோடு, பாரதியார் தெரு, ராஜீவ் காந்தி நகர், மூவேந்தர் நகர், கீழ தேவதானம், நடுத்தெரு காலனி, சஞ்சீவி நகர், மற்றும் பூசாரி தெரு காலனி ஆகிய பகுதிகளில் அம்மா பேரவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பகுதி செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ, வீதி வீதியாகச் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள், தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். அவற்றை கேட்டறிந்த ராஜசேகரன், அதிமுக ஆட்சி அமைந்த உடன் இப்பகுதி கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பிரச்சாரத்தில் மாவளிகருப்பு கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த ராஜசேகரன், இமானுவேல் சேகரனார் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரச்சாரத்தில், தனக்கு ஓட்டு சேகரித்து ராஜசேகரன் பேசுகையில்,‘‘ திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி கிழக்கு தொகுதியில், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் வாழப் போகிற, படிக்கப் போகிற, விளையாடப் போகிற, பிழைப்பு நடத்தப் போகிற ஒரு அமைதியான, வளமான சமூகத்தையும் சூழலையும் உருவாக்குவதற்கு கட்டாயம் ஒரு மாற்றம் தேவை. கிழக்கு தொகுதி மக்கள் விரும்பும் அந்த மாற்றம் உங்களைத் தேடி வரும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஏப்ரல் 23ம்தேதி நடைபெறும் தேர்தலில், இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்’’, என்றார். அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
