திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு 55 ஆவது வார்டு மற்றும் 57 வது வார்டில் போட்டியிடும் வெங்கடேசன் , அலெக்ஸ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேரும் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து இரு சக்கர வாகனங்கள் புடைசூழ மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் அவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த பொழுது மாட்டு வண்டியை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்தனர் . இதனால் தேமுதிகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தேமுதிகவினர் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர் . பின்னர் காவல்துறையினர் தேமுதிகவினரை மாட்டு வண்டியுடன் உள்ளே செல்ல அனுமதித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து தேமுதிக வேட்பாளர் கூறுகையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்ததாகவும் தனது ஆடையில் பட்டை நாமம் போட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார் . 50 ஆண்டுகளாக ஆண்ட திராவிட கட்சிகள் தமிழக மக்களுக்கு பட்டை நாமம்தான் போட்டுள்ளது என்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசும் மாநில அரசும் குறைக்காததை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு அளித்ததாக தெரிவித்தனர். விவசாயிகளின் தோழனான மாட்டுவண்டியில் வந்தது ஏழை எளிய மக்களின் கட்சியாகிய தேமுதிகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக எனவும் தெரிவித்தார்.