திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.இதில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், “ஸ்ட்ராங்க் ரூம்” எனப்படும. பாதுகாப்பு அறையில் வைத்து, அந்த அறையின் கதவு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.அதையடுத்து, ஸ்டராங்க் ரூம் முன்பு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார், துணை ராணுவ படையினர், அதற்கடுத்து, உள்ளூர் போலீசார் என மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மற்ற, 5 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டன. மேலும், ஸ்டராங் ரூம் உட்பட வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜமால் முகமது கல்லூரி முழுவதுமே, கண்காணிப்பு கேமரா மற்றும் போலீசார் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன், நான்காம் தேதி வரை இதே போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும். அதே நேரத்தில், வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்வதற்கும், ‘ஸ்ட்ராங் ரூம்’ பகுதியை கண்காணிப்பதற்கும், உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.