பொங்கல் பண்டிகையையொட்டி, சமத்துவ ஜல்லிக்கட்டுப் போட்டி திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள நடுஇருங்களூர் கருப்புக் கோயில் திடலில் இன்று நடைபெற்றது.
திருச்சி மண்ணச்சநல்லூர் நடு இருங்களூர் கிராமத்தில் நடந்த சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டியை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முதலில் புனித செபஸ்தியார் தேவாலயம், கரும்பாயி அம்மன் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அதிமுக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்..
இந்த போட்டியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் காளைகள், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு வின் காளை மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்-ன் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 450 காளைகள் மற்றும் மூன்று சுற்றுகளாக, 300 மாடுபிடி வீரர்களும் பங்கு பெற்றனர்.
சிறப்பாக மாடுகளை பிடித்த மாடுபிடி வீரருக்கு,சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர். அதைத்தொடர்ந்து விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ”
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். தற்போது இந்த ஜல்லிக்கட்டு விழா தமிழகம் தாண்டி, வட மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டு பரவ வேண்டும். தமிழகத்தில் அனைவரும் வீட்டுக்கொரு மாடு வளர்க்கும் நிலை வரவேண்டும். ஜல்லிக்கட்டு என்பது காளைகளுக்கும், காளையருக்கும் நடக்கும் போட்டி. உள்ளாட்சித் தேர்தல் என்பது அரசியல் கட்சிகள் இடையே நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி” என்றார்.