கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று குறைந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கொரோனா 2-வது அலையால் தற்போது வரை பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றது. இந்தநிலையில் திருச்சியில் புகழ்பெற்ற கல்லூரியான பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திர மோகன் மீது கல்லூரி மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படித்து வந்த சில மாணவிகள் 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரியின் முதல்வருக்கு அனுப்பியிருக்கின்றனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது; பேராசிரியர் வகுப்பறையில் தங்களுக்கு மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்கள் ஈடுபட்டார்’ என்றும் உச்சகட்டமாக `சட்டையை பேண்ட்டை தளர்த்திக்கொண்டு அவர் செய்த சேட்டைகளை பார்த்து தலையை குனிந்துகொண்டே நாங்கள் வகுப்பறையில் இருந்தோம்’ என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் என்றால் தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாயப் படுத்துவதும், அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர் மாணவிகளைப்பார்த்து `எச்ஓடியை பார்க்க போகும் நேரத்தில் முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும்’ என வலியுறுத்தியதாகவும், இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் புகார் கொடுத்திருக்கின்றனர். இந்தப்புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான, கல்லூரியின் துணை முதல்வர் அழகப்ப மோசஸ், கம்ப்யூட்டர் துறை தலைவர் சத்தியசீலன், பேராசிரியை வயலட் ஆகியோர் அடங்கிய குழு புகார் கொடுக்கப்பட்ட தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையையும் கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்திருக்கும் நிலையில் தற்போது மாணவிகளின் புகார் குறித்து காவல்துறை வட்டாரமும் விசாரிக்கத் துவங்கியிருக்கின்றது.
தமிழகத்தின் முக்கியமான கிருஸ்தவ கல்லூரி மட்டுமல்லாது பல்வேறு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் உருவாக்கிய பிஷப் ஹீபர் கல்லூரியில் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனை எழுந்திருப்பது திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கின்றது.தமிழ்த்துறை மாணவிகள் கொடுத்திருக்கும் புகாருக்கு ஆளான அத்துறையின் தலைவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் சில மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation