திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தற்கொலை தடுப்பு கிளப் தொடக்க விழா, பகுத்தறிவூட்டல் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரியின் கோல்டன் ஜூபிலி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்க பணிகளின் டீன் டாக்டர் ஆனந்த் கிடியோன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். முதன்மை விருந்தினராக MAA காவேரி மருத்துவமனை மகளிர் மற்றும் குழந்தைகள் மனநல ஆலோசகர் டாக்டர் தஸ்னிம் பேகம் மாணவர்களுக்கு மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இதேபோல் விரிவாக்க பணிகளின் இணை டீன் டாக்டர் சாம் தேவ அசீர், மாணவர்களுக்கு மன உறுதியின் அவசியத்தை எடுத்துரைத்தார். அதில் தற்கொலை தடுப்பு முக்கியத்துவம், அதற்கான வழிமுறைகள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய சமூகத்தின் பங்களிப்பு ஆகியவற்றை விளக்கினார். இந்தப் நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தற்கொலை தடுப்பு கிளப் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் இரசாயனவியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் கேத்தரின் மீனா மற்றும் மாணவர் ஆலோசகர் பேராசிரியர் டேவிட் சாம் பால் ஆகியோர் செய்திருந்தனர்.