சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தது. அதிக விலைக்கு பூக்கள் விற்கபட்டாலும் ஏராளமான பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கி செல்கின்றனர்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அக்டோபர் 4ம் செவ்வாய் கிழமை கொண்டாடப்படுகிறது.
இதன் காரணமாக இன்று காலை முதல் பூஜைக்கு தேவையான பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பூஜைக்கு முக்கிய தேவையான பூக்களின் வியாபாரம் இன்று காலை முதல் சூடுபிடிக்கத் தொடங்கியது. பூ வியாபாரிகளுக்கு தேவையான பூக்கள் எல்லாம் ஸ்ரீரங்கம் மற்றும் காந்தி மார்க்கெட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதல் வெளி மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பூக்கள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால் பூ விலை அதிகமாக இருந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு,, (ஒருகிலோ) சம்மங்கி -70 ரூபாய்க்கும், செவ்வந்தி -100 ரூபாய்க்கும், ரோஜா -80 ரூபாய்க்கும், மல்லிகை, முல்லை பூக்கள் -300 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி (கிலோ ஒன்றிக்கு) மல்லிகைபூ-800, பிச்சிபூ-200, கோழிகொண்டைபூ-60, முல்லை பூ -800, கனகாம்பரம்-800, ரோஜா-160, ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை அதிக அளவில் இருந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கிச் சென்றனர். இந்த விலையானது இன்னும் இரண்டு நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.