ஆவினில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை, டிசம்பர் 17 ஆம் தேதி முதல் காவல் துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் ராஜேந்திர பாலாஜி இருக்கலாம் என கோணங்களில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு தேடி வந்தனர்..
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகவில் ஹசன் பகுதியில் நேற்று கைது செய்தனர். அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விருதுநகர் போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பின்னர், விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்றிரவு அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விடிய விடிய பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, இன்று காலை ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி பரம்வீர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அதன்படி, வரும் ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு இன்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை படம் எடுப்பதற்காக பல மணி நேரமாக காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.