திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு செல்வதால் அவரை வழியனுப்ப மேயர், ஆணையர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் கூட்டம் 10.30 மணிக்கு முன்கூட்டியே தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் கூடினர். ஆனால் 10.30 மணிக்கு கூட்டம் தொடங்காமல் 10.40 மணிக்கு தொடங்கியது. அப்போது திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம், மேயர் அன்பழகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முதல்வர் வருகை இன்று இருக்கிறது. அதனால் கூட்டத்தை ரத்து செய்து வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும். முதல்வரை வழி அனுப்ப அனைவரும் செல்ல வேண்டி உள்ளது. இல்லை என்றால் கூட்டத்தை 9 மணிக்கு தொடங்கி இருக்க வேண்டும் முதல்வர் வருகையை விட கூட்டம் ஒன்றும் முக்கியமானது இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதைத் தொடர்ந்து கூட்டரங்கில் இருந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலரும் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என சுஜாதாவும் வலியுறுத்தினார்.ஒரு கட்டத்தில் இது தொடர்பாக மேயர் அன்பழகனுடன் முத்துச்செல்வம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மாமன்ற கூட்டத்தின் தொடக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேயர் அன்பழகனும் அமைச்சரிடம் கேட்டுதான் கூட்டத்தை முடிவு செய்தேன் என கூறி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற பின்னர் இது தொடர்பாக பேசிக் கொள்ளலாம் என்றார். தீண்டாமை உறுதிமொழி ஏற்பு மற்றும் திருக்குறள் விளக்கம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கூட்டம் தொடங்குவதற்கு முன்பு “மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள கூட்டத் தீர்மான பொருள்களில் எதற்கு ஆட்சேபம் இருக்கிறதோ அவற்றை மற்றும் ஒத்திவைத்து விடுவோம். மற்ற பொருட்களை நிறைவேற்றிவிட்டு செல்லலாம். மக்கள் பணி எவ்விதத்திலும் தடைபடக்கூடாது” என்று மேயர் அன்பழகன் தெரிவித்தார். இதனை கவுன்சிலர்கள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து ஒரு சில பொருள்கள் மட்டும் விவாதம் இன்றி ஒத்திவைக்கப்பட்டது. இதர கூட்ட பொருள்கள் அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது