திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் அன்பழகன் பேசும்போது , திருச்சி மாநகராட்சியில் இதுவரை 1196 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ 70 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் 52 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நான்கு கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மாதத்தில் 726 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 28,625 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்துள்ளோம். மேலும் நீதிமன்ற உத்தரவுபடி கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களை பராமரிக்க தனி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து கவுன்சில முத்து செல்வம் பேசுகையில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கழிப்பிடம் டெண்டரில் மாநகராட்சிக்கு ரூ. 13 லட்சம் கூடுதலாக கிடைத்தது. ஆனால் அங்குள்ள சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டரில் ரூ.3 லட்சம் மட்டுமே கூடுதலாக விடப்பட்டுள்ளது. ஆகவே சத்திரம் பஸ்நிலையம் சைக்கிள் ஸ்டாண்ட் ரீ டெண்டர் விட வேண்டும். அதற்கு மேயர் அன்பழகன் ஏற்கனவே கொடுத்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, ரீ டெண்டர் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் பொறுப்பு? அதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர் முத்து செல்வத்திற்கும், மேயர் அன்பழகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து முத்து செல்வம் ரீடண்டர் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாபோராட்டம் நடத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .