இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கணக்கில் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் சுருக்க முறை திருத்தம் நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 752 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 10 ஆயிரம் பெண் வாக்காளர்களும்,284 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என ஆக மொத்தம் 23 லட்சத்து 46 ஆயிரத்து 36 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் தொகுதி வாரியாக மொத்தம் 1410 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலானது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.