திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தன்னார்வ பயலும் வட்டத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலர் வீரராகவ ராவ் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன்,மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, திருச்சி மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் ஆகியோர் கலந்துகொண்டு தாங்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற தயார் செய்த விதம், பயன்படுத்திய அணுகுமுறை, தேர்வு தயாரிப்பு நுணுக்கங்கள் ஆகியவற்றை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விழாவில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் போட்டித் தேர்வு ஆர்வலர்களும், திருச்சி மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தை சேர்ந்த ஐ ஏ எஸ் , ஐ பி எஸ்ஐ, ஜஆர்எஸ், குருப் 1, குருப் 2,வங்கிப் பணி ரெயில்வே பணி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு இங்கு பயின்று தேர்வாகி சென்று இந்தியா முழுவதும் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் திருச்சி மாவட்டத்தில் கல்லூரி படிப்பு பயிலும், பயின்று முடித்த மாணவர்கள் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் ஆகியோருக்கு குழு விவாதத்தின் வழியாக மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் உள்ள அலுவலர்களால் போட்டித் தேர்வு குறித்த விழிப்புணர்வு வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தன்னார்வ பயிலும் வட்டத்தினை தொடங்கி சிறப்பாக செயல்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக முன்னாள் உதவி இயக்குனர் சுரேஷ்குமார். மற்றும் அவருக்கு உறுதுணையாக பணியாற்றிய வேலைவாய்ப்பு துறை அலுவலர்களைமுன்னாள் மாணவர் சங்கம் கௌரவித்து மரியாதை செய்தது.
