திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கண்டித்தும், 24 மணி நேரம் தொடர்ந்து மது விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மண்டல தலைவர் ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் திருச்சி குழுமாயி அம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தை மர்ம நபர்கள் சிலர் கஞ்சா போதையில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலின் போது பாஜக அலுவலகத்தில் பணிபுரிந்த காவலாளி கோட்டைசாமி வயது 52 என்பவர் தாக்குதல் நடத்திய கஞ்சா போதை ஆசாமிகளை தடுக்க முயன்றார் அப்போது கஞ்சா போதையில் இருந்த கும்பல் காவலாளியை கட்டையால் தலை மற்றும் கை கால்களில் தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் குறித்து அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த காவலாளியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய கஞ்சா போதை ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் பாஜக அலுவலகத்தில் புகுந்து காவலாளியை தாக்கிய சாம்பவம் குறித்து அறிந்து வந்த திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் பாஜக தலைவர் ராஜசேகரன் மற்றும் பாஜகவினர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையம் முன்பு பாஜகவினர் கஞ்சா போதையில் காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக கூறி முற்றுகை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது