கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும், அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை, சீர்காழி தாலுக்கா ஆயங்குடி பள்ளம், தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகை மங்கலத்தில் வெள்ளம் சூழ்ந்த விளைநிலங்களை, கிராமத்தில் தண்ணீர் சூழ்ந்த சம்பா, தாளடி பயிர்கள் ஆகிய பகுதிகளை தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் அங்குள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 175 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள், பாய், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். மேலும் முன்னாள் முதல்வரும், இன்னாள் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வழியாக சேலம் சென்றார்.
முன்னதாக திருச்சி நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா பகுதியில் காரில் வந்த அவருக்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் கொத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கு.பா கிருஷ்ணன், பூனாட்சி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்