விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் சொன்னபடி விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தவில்லை. இந்தியாவில் 95 கோடி விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மோடியை கண்டித்து
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறி கருப்பு கொடியுடன் பேரணியாக சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர், கைது செய்யப்பட்ட விவசாயிகள், திருச்சி உறையூர் பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.