திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கி.பி ஆறாம் நூற்றாண்டை சார்ந்த பழமையான புராதன சிறப்பு வாய்ந்த மேலச்சிதம்பரம் எனும் திருப்பைஞ்சீலியில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 5ம் தேதி முதல் சிம்ம வாகனம், அன்ன வாகனம் பூத வாகனம், கிளி வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நீலிவனேஸ்வரர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று மதியம் 2 மணிக்கு விசாலாட்சி அம்பாள் உடனுறை நீலிவனேஸ்வரர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீலிவனேஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மதியம் 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்று திருத்தேர் தேரோடும் வீதி வழியாக ஆடி அசைந்து வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சிவாயா, நமசிவாயா என பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.