திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு் முகாமில் பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு அரசுத் துறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் அதன் தொலைநோக்கு பார்வை குறித்தும் பொதுமக்களுக்கு சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் முதன் முறையாக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 16 ஒருங்கிணைந்த பண்ணையம் உருவாக்கப்பட்டுள்ளது என பேசினார்.
இந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் வருவாய் துறை, (சமூக பாதுகாப்பு திட்டம்), மாற்று திறனாளிகள் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளிலிருந்து 505 பயனாளிகளுக்கு ரூ. 53, 21,190 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் முகாமில் பெறப்பட்ட 400-க்கு மேற்பட்ட மனுக்களை பரிசீலித்து அதற்கு தீர்வு காணப்படும் என முகாமில் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் லதா கதிர்வேல், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், மண்ணச்சநல்லூர் ஒன்றிய பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.