பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர்கள் இணைந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர்.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இயக்குனர் முருகேஸ்வரி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார்.
முன்னதாக வண்ண கோலப்போட்டி கயிறு இழுத்தல் பானை உடைத்தல் மியூசிக்கல் சேர் நடனம் நாடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பேசுகையில்:- திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு கூடிய விரைவில் பட்டா வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
மேலும் அவர்கள் சுய தொழில் செய்யவும், படிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளும் இந்த மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளது என தெரிவித்தார். இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை சேப் அறக்கட்டளையின் நிறுவனர் கஜோல் செய்திருந்தார்.