ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க அமைப்பின் 104 ஆவது அமைப்பு தினமான இன்று, கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் நலவாரியம் வழங்கும் 1200 ரூபாய் ஓய்வூதியம் ஏற்புடையதல்ல. வாரிய முடிவின் படி மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலம் போல தீபாவளி போனஸ் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5லட்சம் தபால் அட்டைகளை இன்று அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளனர். அதன் ஒருபகுதியாக திருச்சி தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டது.
திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பழனியப்பன் முத்தழகு மருதாம்பாள் உள்ளிட்ட கட்டட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக கோரிக்கை முழக்கமிட்டனர்.பின்னர் தபால் அட்டைகளை முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.