திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு 2021 ஜனவரி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ரூ 2 கோடியே 92 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருட்டு வழக்கில் மீட்டுள்ளனர். ரவுடிகள் மீது மாவட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 40 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு வழக்குகளில் 52 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 121 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .இந்த ஆண்டில் 5 லட்சத்து 78 ஆயிரத்து 490 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ மூன்றரை கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 52 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், ரவுடிகளை பிடிக்கவும் 6 தனிப்படைகள் செயல் வருகின்றன. சட்டவிரோதமாக மது விற்பனை, பட்டாசு விற்பனை ஆகியவற்றை தடுக்கும் வகையில் ஐந்து சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்