தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை மலையென குவித்து வரும், திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த மோகன்- பிரகதா, இவர்களின் மகள் இளம் வீராங்கனை சுகிதாவின் வீட்டிற்கு இன்று காலை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சிறுமி தனது 12 வயதில் கோவா சர்வதேச போட்டியில் முதல் பரிசாக தங்கம் வென்றதில் தொடங்கி, சிங்கப்பூர் சர்வதேச போட்டியில் முதல் பரிசு தங்கம், மற்றும் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன், டெல்லியில் நடந்த தேசிய போட்டியில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளியென 25க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை குவித்தும், பெரியவர் நல்லகண்ணு அவர்களின் முன்னிலையில் ஜூனியர் பிரிவில் உலக சாதனைபடைத்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பாராட்டையும் பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னோடி பெண்மணி விருதும், இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய இளம் கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் (பிஸ்டல் பிரிவு) போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசு தங்கம் வென்று தனது திறமையை மேலும் விரிவு படுத்தியுள்ளார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே சிலம்பக்கலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வகைகளை கற்று, ஆறு வயது சிறுவர் முதல் அனைவருக்கும் இலவசமாகவே சிலம்பம் கற்று தரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது வியப்புக்குரியதும் பாராட்டுக்குரியதுமா கும், இப்படி மிகப்பெரும் சாதனை புரிந்த இளம் வீராங்கனை சுகிதாவின் கோரிக்கையான சிலம்பக் கலையை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டுமென மாண்புமிகு சுற்றுச்சூழல் – விளையாட்டு துறை அமைச்சர் சி.வி. மெய்யநாதன் அவர்களிடம் விடுத்தகோரிக்கையையேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் சிலம்பக் கலையை தேசிய விளையாட்டிற்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது இவருக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு,
விரைவில் திருச்சியில் தொடங்கப்படவிற்க்கும், ரைபிள் கிளப்பில் கௌரவ உறுப்பினராக பரிந்துரை மற்றும் சிலம்ப பயிற்சிக்கு களம் அமைத்து தரப்படும் என்றும், இளம் வீராங்கனை சுகிதாவால் நமது திருச்சிக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை என பெற்றோர்களிடம் கூறி வாழ்த்து தெரிவித்தார். மேலும் வீராங்கனை சுகிதா துப்பாக்கி வாங்க சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இடம் வழங்கினார்.