திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு ஜெ. ஜெ நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் வயது 60. இவர் மாநகராட்சி 39 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி சுசிலா என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் வசித்து வருகிறார். இவரும் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மேலும் வரும் அக்டோபர் மாதம் கலியபெருமாள் ஓய்வு பெற உள்ள நிலையில் அவருடைய செட்டில்மெண்ட் பணத்தை தங்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என முதல் மனைவியும் அவருடைய மகன் குமார் ஆகியோர் கலியபெருமாளிடம் கேட்டு அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கலியபெருமாள் தனது இரண்டாவது மனைவி பாப்பம்மாளுடன் கொட்டப்பட்டு ஜே.ஜே நகரில் வசித்து வந்தார். வழக்கம்போல் இன்று அதிகாலை 3 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக பொன்மலை போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்மலை வாட்டர் டேங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செட்டில்மெண்ட் பணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முதல் மனைவியின் மகன் குமார் தந்தையை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் குமார் தலைமறைவாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துப்புரவு பணியாளர் அதிகாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *