மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மற்றும் கண்டித்தும், அவுட்சோர்சிங் விடுவதை உடனே கைவிட வலியுறுத்தியும், ரயில்வேயில் உள்ள 50,000 காலி பணியிடங்களை சரண்டர் மற்றும் சர்ப்ளஸ் செய்யும் ரயில்வே நிர்வாகத்தின் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்,
பொன்மலை பணிமனை ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட புதிய உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகை, கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், தொடர்ந்து தொழிலாளர் விரோதப் போக்கினை கடைப்பிடித்துவரும் மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் ரயில்வே ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்பகுதி ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்மலை பணிமனை கோட்டத் தலைவர் பால்ரெக்ஸ் தலைமையிலும், தென்பகுதி ரெயில்வே தொழிலாளர் சங்கம் துணை பொதுச் செயலாளர் ரகுபதி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட தென்பகுதி ரெயில்வே தொழிலாளர்கள் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு இன்று காலை பங்கேற்று மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வரை இந்த ஆண்டு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.