கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொமுச சார்பில், மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது. மராத்தான் போட்டியை, முன்னாள் அமைச்சர் பொன்முடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் மற்றும் தொமுச நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த மராத்தான் போட்டியானது, திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கை சுற்றி வந்து, மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கின் உள்ளே நிறைவு பெற்றது.
இந்த மராத்தான் போட்டியானது மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. முதல் பிரிவில், 8 வயது முதல், 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும், அடுத்த பிரிவில், 14 வயதில் இருந்து, 18 வயது வரை உள்ள வீரர் வீராங்கனைகளும், மற்றொரு பிரிவில், 19 வயதிலிருந்து அதற்கு மேற்பட்ட நபர்கள் என தனித் தனியாக மராத்தான் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி, பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அமைச்சர் பொன்முடி தனது பதவியை இழந்துள்ளார்.
வெறும், எம்எல்ஏவாக தொடரும் அவர், திருச்சியில் தேசியக்கொடி உள்ள அமைச்சர்களுக்கான அரசு காரில் முன் இருக்கையில் அமர்ந்து கிளம்பி சென்றார்.இந்த சம்பவம் திருச்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திமுகவினர் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘முன்னாள் அமைச்சர் பொன்முடி அரசு காரில் தனியாக பயணிக்கவில்லை. அமைச்சர் அன்பில் மகேஷ் உடன், அவரது காரில் அமர்ந்துதான் சென்றார்’ என்று விளக்கம் அளிக்கின்றனர்.