திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. இந்த அமர்விற்கு முதன்மை மாவட்ட நீதிபதி கிளஸ்டோன் பிளசட் தாகூர் தலைமையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வழக்குகள் குடும்ப நலம் மற்றும் மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள், அனைத்து சார்பு நீதிமன்ற வழக்குகள் மற்றும் சிறப்பு சார்பு நீதிமன்ற வழக்குகளுக்கு 7 அமர்வு நீதிமன்றத்தில் சமரச தீர்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற பிரபு வயது 29 என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு கமலா நிக்கேந்தன் பள்ளி கட்டிடத்தில் எலக்ட்ரிஷன் வேலை பார்த்த போது விபத்தில் உயிரிழந்தார் இது சம்பந்தமாக அவரது பெற்றோரான தந்தை கோபால், தாய் மணிமேகலை ஆகியோர் தொழிலாளர் துணை ஆணையர் மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்
இன்று தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பள்ளி சார்பாக மக்கள் தொடர்பு அதிகாரி மோகன் மற்றும் பிரபுவின் குடும்பத்தாருடன் சமரச தீர்வு ஏற்பட்டு விபத்தில் உயிரிழந்த எலக்ட்ரீசியன் பிரபுவின் சகோதரர்களுக்கு விபத்து இழப்பீடு தொகையாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை முதன்மை மாவட்ட நீதிபதி கிளஸ்டோன் பிளசட் தாகூர் வழங்கினார். அருகில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், தலைமைக் குற்றவியல் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர். தேசிய மக்கள் நீதிமன்றம் ஏற்பாட்டினை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் செய்திருந்தார்.