தே.மு.தி.க திருச்சி மாவட்ட செயலாளர் டிவி கணேசன் இல்ல திருமண விழா திருச்சியில் நடைபெற்றது இந்த திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிச்சாமி வேறு டிராக்கில் மக்களை சந்திக்கிறார். நாங்கள் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் அடிப்படையில் பயணம் செய்கிறோம். எங்கள் பயணம் வேறு, அவரின் பயணம் வேறு. தே.மு.தி.க யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். அதுவரை எங்கள் கட்சி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். ஜனவரி 9 ஆம் தேதி வரை சற்று காத்திருங்கள். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும் போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. அது செயல்படுத்தும் போது தான் அதன் நிறை குறைகள் தெரியும்.
தே.மு.தி.க உடன் அனைத்து கட்சியினரும் நட்போடு தான் பழகி வருகிறார்கள். ஆனால் கூட்டணி என்கிற வார்த்தைக்குள் நாங்கள் செல்லவில்லை. ஜனவரி 9 ஆம் தேதி தான் அதற்கான விடை தெரியும். எம்.ஜி.ஆருக்கு பின் விஜயகாந்த் தான் மக்கள் தலைவர் என்பதை உலகம் ஏற்றுகொண்டுள்ளது. அவர் குறித்து அரசியலுக்கு வருபவர்கள் யாரும் பேசாமல் இருக்க முடியாது. விஜயகாந்த் குறித்து புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட பேசுவது மகிழ்ச்சி தான். 2005 ஆம் ஆண்டு நடந்த தேமுதிக மாநாடு இன்றும் சரித்திரமாக உள்ளது. எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. த.வெ.க மாநாட்டில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருந்தார்கள். அனைத்தையும் குறையாகவே பார்க்க கூடாது. விஜய் ரேம்ப் வாக் சென்ற போது சிலர் ஆர்வத்தில் அதில் ஏறினர் அதை பவுன்சர்கள் கட்டுப்படுத்தினர். வேண்டுமென்று யாரும் தள்ளுவது கிடையாது. மாபெரும் கூட்டம் இருக்கும் போது இது போன்று நடப்பது எல்லா கட்சியிலும் சகஜம் தான்.
கொடி, பேனர்கள் வைக்க காவல் துறை அனுமதி மறுக்கிறார்கள். தேமுதிக வை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்க கூடாது. அனுமதி கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் யாருக்கும் அனுமதி கொடுக்க கூடாது. அரசு இதில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ரஜினிகாந்தின் திரைத்துறையில் 50 வது ஆண்டுக்கு நான் தான் முதலில் வாழ்த்து கூறினேன். விஜயகாந்த் இருந்திருந்தால் அவர் விழாவே எடுத்திருப்பார். ரஜினிகாந்த்தின் கூலி படம் வரை அனைத்து படங்களும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் இது போல் எங்கும் நடந்ததில்லை. தேர்தலுக்கு முன் திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அதில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. தற்போது திமுக செயல்படுத்தும் திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தவையா புது திட்டங்களா என்பதை பார்க்க வேண்டி உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது தான் இந்த ஆட்சியை சிறந்த ஆட்சியாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.