திருச்சியில் நடந்த பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் இல.கண்ணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது…. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் விக்கிரவாண்டியில், பா.ம.க.,வின் அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளனர். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகம் இருக்கும். இந்தியாவில் நடைபெறும் 90 சதவீதம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் தான் வெற்றி பெறுகின்றனர். தெருவுக்கு ஒரு அமைச்சர் என முகாமிட்டு, இலவசங்கள் அளிக்கின்றனர். தமிழகத்தில் ஒரு இடைத்தேர்தல் நடத்தப்படக் கூடாது என்பதற்கு, இந்த தேர்தலும் இலக்கணமாக இருக்கிறது. ஆனால், இந்த இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தலில் போட்டியிடாத கட்சியினர், சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. போட்டியிட்டால் மூன்றாவது நான்காவது இடத்துக்கு வந்து விடும் நிலையில் இருக்கும் கட்சியினர், வேறு ஒரு கட்சி முதல் இடத்துக்கு வந்து விடக்கூடாது, என்று பிரசாரம் செய்கின்றனர்.

 ஏ டீம் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் பி டீம் அ.தி.மு.க., விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் ஒதுங்கி இருப்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. கள்ளச்சாராய கொலைகள், இந்த இடைத்தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். அரசின் செயலற்ற தன்மையால் தான், கள்ளச்சாராய மரணங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இடைத்தேர்தல் மூலமாக, ஆளுங்கட்சி மீதான மக்களின் அதிருப்தி வெளிப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதே சமயம் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பா.ம.க.,வுக்கும் நீட் தேர்வு தொடர்பான மாற்றுக் கருத்து உள்ளது. இது தான் ஆரோக்கியமான அரசியல். புதிதாக அரசியல் கட்சி துவங்கி உள்ள நடிகர் விஜய் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதல், யாருக்கும் எதிரானது இல்லை. தேர்ச்சி விகிதம் மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற ஆதாரத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் சேர்க்கை பெற உள்ளனர். நீட் தேர்வு நடத்துவதற்கு முன், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றவர்களின் புள்ளி விபரங்கள், நீட் தேர்வுக்கு பின், புள்ளி விபரங்களை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும். மாநில அரசு புள்ளி விபரங்களை வெளியிடாமல், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சியினர் பா.ஜ., கட்சி மீதான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் நீட் தேர்வு எதிர்ப்பை முன் வைத்துக் கொண்டுள்ளனர். நடிகர் விஜய்யும் தி.மு.க., சார்ந்த அரசியலை கையில் எடுப்பதாக இருந்தாலும் வரவேற்கிறோம். எங்களுக்கு பிரச்னை இல்லை. பா.ஜ., கட்சியின் அரசியல் எளிமையாகி, பலமாகி விடும். சித்தாந்தமும் தனித்துவமாக இருக்கும். நடிகர் விஜய், தி.மு.க., சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க, தமிழகத்தில் பா.ஜ., கட்சிக்கான ஓட்டும், ஆதரவும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும். இந்தியாவில் இதுவரை மும்மொழி கொள்கை தான் இருந்தது. தி.மு.க.,வினர் இல்லை என்று சொன்னால் அது தவறு. கடந்த 2020 வரை, இந்தியாவில் உள்ள இரண்டு கல்விக் கொள்கையிலும், ஹிந்தியை கட்டாய மொழியாக வைத்திருந்தனர்.

தமிழக அரசு அதை பின்பற்றாமல் இருந்திருக்கலாம். புதிய கல்விக் கொள்கையில், ஹிந்தி ஆப்ஷனில் உள்ளது. தமிழக அரசை பொருத்தவரை, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்ற பெயரில், முட்டாள் தனமான விவாதத்தை முன் வைத்துள்ளனர். ஹிந்தி திணிப்பு என்று சொல்லும் தி.மு.க., அரசு, உருது பள்ளிகளை அதிகம் துவக்க வேண்டும், என்று ஊக்கப்படுத்துகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்ற பெயரில், அவர்களுக்கு விருப்பமான சிலவற்றை திணித்து, வித்தியாசமான கல்விக் கொள்கை என்கின்றனர். மதரஸா பள்ளிகளின் பாடத் திட்டத்தை, தமிழக மக்களும், தி.மு.க., கூட்டணி கட்சியினரும் ஏற்றுக் கொள்கிறீர்களா? மாநில அரசின் கல்விக் கொள்கையை, மக்கள் இன்னும் தீர்க்கமாக பார்க்க வேண்டும். மத்திய அரசின் கல்விக் கொள்கையை வைத்து, மறுபடியும் அரசியல் நாடகம் போடப்பார்க்கின்றனர். வெள்ளை வேட்டியை கட்டிக் கொண்டு, கோஷம் போட்டுக் கொண்டும் தமிழகத்தில் சுற்றித் திரிபவர்களால் தான், அரசியலுக்கு பீடை பிடித்துள்ளது. அ.தி.மு.க.,வின் அழிவுக்கு, ஜெயக்குமார் போன்ற பல பேர் காரணம். அரசியல்வாதி படிப்பதன் மூலம் மெருகேற்றிக் கொள்ள வேண்டும். அண்ணாமலை வெளியேறி விட்டால், அ.தி.மு.க., இழந்த இடத்தை பிடித்து விடலாம், என்ற பகல் கனவு பலிக்காது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *