பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு விழா போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கி விளையாடினார். முன்னதாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வெளியே வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து காளையின் திமிலைப் பிடித்தபடி எல்லை கோடு வரை சென்று தங்கள் வீரத்தை வெளிக்காட்டினர்.
இதற்காக ஜல்லிக்கட்டு விழா கமிட்டி சார்பில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சி வண்ணாங்கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்ற இளைஞர், வாடி வாசலை கடந்து வெளிவரும் மாடுகளைப் பிடிக்கும் இடமான கலெக்ஷன் பாயிண்ட்டில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஜல்லிக்கட்டு காளை ஒன்று வயிற்று பகுதியில் முட்டி தூக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே அருகிலிருந்த பொதுமக்கள் அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே நடைபெற்ற திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற நல்லூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு 1 – ஒருவர் உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.