பல்நோக்கு பணியாளராக கோவிட் 19 கொரோனா நோய் தடுப்பு பணி ஆற்றிய ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தர பணி வழங்கக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நர்சிங் அசிஸ்டன்ட் அசோசியேஷன் சங்க செயலாளர் ஆமூர்.சுரேஷ்ராஜா தலைமையில் கலெக்டர் சிவராசிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளராக கோவிட் 19 கொரோனா நோய் தடுப்பு பணிக்காக கடந்த ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கடந்த 11 மாதங்களாக தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டு கொரோனா நோய் தொற்று பரவும் காலகட்டத்தில் எங்களின் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, எங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பல்நோக்கு பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம். தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்ததை அடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக எங்களை பணியிலிருந்து நீக்கிவிட்டனர். மேலும் மூன்றாம் அலை வந்தால் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்திக் கொள்கிறோம் என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. தற்போது எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரம் இழந்து வேலை இல்லாமல் இருக்கிறோம் எங்களுக்கு தமிழக அரசும் மாவட்ட கலெக்டர் அவர்களும் நிரந்தர பணி வழங்கி எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரி மனு அளித்தனர்.
பல்நோக்கு ஒப்பந்த பணியாளர் ஒருவர் கூறுகையில்,
இந்தக் கொடிய கொரோனா நோய் தொற்று பரவும் காலகட்டத்தில் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பொதுமக்களுக்காக இரவு பகலாக பணியாற்றி வந்திருக்கிறோம். தற்போது எங்களுக்கு வேலை இல்லாமல் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் எங்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.