தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி 61 வது வார்டு ,காட்டூர் காவேரி நகரில் புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் போது அதை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என முதலமைச்சர் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார்.அவர் கோரிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன.நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம் நிச்சயம் அதில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு மாணவர்கள் வருகை, கொரோனா, பள்ளிகளின் மற்ற நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கண்காணித்து வருகிறோம்.அது குறித்து வரும் 15ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.அதன் பின்பு தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார். பள்ளிகளில் மாணவர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.