தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார் திருச்சி மாவட்ட தலைவர் சகுந்தலா முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக பணி செய்து வரும் சிறப்பு பயிற்றுநரை பணி நிரந்தரம் செய்ய கோரியும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணி ஆணை வழங்கப்படவில்லை பணி ஆணை வழங்கிட கோரியும், சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி சலுகைகள் வழங்கிட கோரியும், மேலும் நான்கு ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தபடவில்லை.
ஊதியத்தை உயர்த்தி வழங்கிடக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பி கொட்டும் மழையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.