பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக கடுமையாக உடற்பயிற்சி எடுத்தும், தங்கம் வெல்லும் தகுதிப் பெற்ற மாணவர்கள் அப்போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்துவருகின்றனர். தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களை, சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்.., பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனுமதி கேட்டோம் , அதற்கான தேதி முடிந்துவிட்டதாக கூறுகின்றனர். இறுதி தேதிக்கான முன்னறிவிப்புகள் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக 2 வருடம் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு உள்ளோம். இதுதான் எங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என கூறினர்.