தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் இரா.தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு பின்னர் பொது செயலாளர் தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது….
எங்களுடைய பிரதான கோரிக்கைகளை தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் காலம் காலமாக வந்து கொண்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு உட்பட்டவர்கள் 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.
நிதி நிலைகளை காரணமாக வைத்து இதை புறம்தள்ள வேண்டாம் என்ற கோரிக்கை வைக்கிறோம்.தொடக்கக் கல்வித் துறையை தனித்துறை ஆக்கி முழு சுதந்திரமாக இயங்க விடாமல் தடை செய்கின்ற 101, 108 அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்ததின் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக உள்ளது. எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் எனக் கூறினார்.
இக்கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் தாஸ், மாநில பொருளாளர் தியாகராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணகுமாரி, திருச்சி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், நாகராஜன், பொருட்செல்வம், லாரன்ஸ், அழகப்பன் கார்த்திக் செல்வதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.