கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் இறந்தார் இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பினர் (NIA) மேற்கொண்ட விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது மத்திய புலனாய் அமைப்பான NIA விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இது குண்டு வெடிப்பு என்றும் தங்களிடன் ஆதாரம் இருக்கிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். எனவே, அவரை கைது செய்து NIA அமைப்பினர் விசாரணை செய்ய வேண்டும், மேலும், தமிழக அரசுக்கு விரோதமாகவும் இந்து மத துவேஷத்தை ஏற்படுத்தி பேசி வரும் ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் மாநில துணைச் செயலாளர் செழியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கண்டன உரையை சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித், மகஇக மாநில பொதுச் செயலாளர் கோவன், சமூக நீதி பேரவை தலைவர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன உரையை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் தவறான செய்திகளை பரப்பி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டும், தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்