திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மாமன்ற சாதாரணக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கள், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழை நீர் வடிதல் பராமரிப்பு குறித்த மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவரும், 39-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் பேசுகையில்:- எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக இணைப்புகள் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் வீட்டின் கழிப்பறையின் வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் இப்பகுதிபொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டத்தை விட செப்டிக் டேங்க் எங்களுக்கு போதுமானதாக உள்ளது என தெரிவித்தனர். மேலும் பாதாள சாக்கடை திட்டம் பயனற்ற திட்டமாக உள்ளது. உடனடியாக இதனை சரிசெய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையர் வினோத், நகரப் பொறியாளர் சிவபாதம் , மண்டலத் தலைவர்கள்மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

