உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா நோய் தொற்றானது தற்போது பி எஃப் 7 என்று உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவ ஆரம்பித்ததால் உலகநாடுகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களை மீட்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக முழுவதும் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த வேண்டிய முதல் உதவிகள் குறித்த செயல்முறை விளக்கம் இன்று நடைபெற்றது.
இதில் நோய் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை மையத்திற்குள் கொண்டுவரப்பட்டவுடன் அவருக்கு பிபி மற்றும் பிரஷர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் வாயு அளிப்பது மற்றும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதா என்பதை ஆராய்வது உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் நடைபெற்றது. இந்த செயல்முறை விளக்க பணிகளை அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் நேரு கூறுகையில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது அதில் 50 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் 50 சாதாரண படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 25தீவிர படுக்கை வசதிகளும் உள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு போதுமான அனைத்து வசதிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது. மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்க படக்கூடிய நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் தேவையும் தற்போது அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். இந்த கொரோனா சிகிச்சை பிரிவை கண்காணிக்க 250 மருத்துவர்கள், செவிலியர்கள் 200 பேரும், தயார் நிலையில் உள்ளனர். மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.